நியூயார்க்கில் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதரக அதிகாரியின் மகள் நிரபராதி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2,25,000 அமெரிக்க டாலர் (ரூ. 1 கோடியே 36 லட்சம்) நஷ்ட ஈடு அளிக்க நியூயார்க் நகரம் முன்வந்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவசிஷ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா (18). நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் ஜான் பிரவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, தனது பள்ளி ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியதாக கிருத்திகா மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கிருத்திகா, பள்ளியிலிருந்து கைவிலங் கிடப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டார். ஒரு நாள் முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார். அதை காரணம் காட்டி பள்ளியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கிருத்திகா சார்பில் வழக்கறிஞர் ரவி பட்ரா ஆஜரானார். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நேரத்தில் பெரு வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார் கிருத்திகா. அது, அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கணினி தடயவியல் வல்லுநர்கள் நடத்திய விசாரணையில் மின்னஞ்சலை அனுப்பியது கிருத்திகா இல்லை என்பதும், வேறொரு மாணவர்தான் அக்குற்றத்தை செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதற்கு ரூ. 1.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கிருத்திகாவுக்கு 2,25,000 அமெரிக்க டாலர் வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் முன்வந்தது. அதை கிருத்திகா ஏற்றுக்கொண்டார். நகர நிர்வாகம், கல்வி வாரியம், காவல்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மீது தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கிருத்திகா ஒப்புக்கொண்டார்.

இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கை முடித்து வைப்பதாக மாவட்ட நீதிபதி ஜான் கோல்ட் அறிவித்தார்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top